ஆர்.கே. நகரில் தினகரன் வெல்வதற்கான வாய்ப்பில்லை என்று செய்திகள், கணிப்புகள் வெளியாகி இருந்தாலும் தினகரன் பணத்தால் சாதிக்க முடியும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.
எனவே வாக்காளர்களை கவர அவர் பணத்தை கொட்டி வருகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. பணம் முதல் வீட்டு மளிகை சாமான்கள் வரை வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இடம்பெறும் தேர்தல்கள் ஜனநாயகத்தை விட்டு விலகிச்செல்வதை ஒவ்வொரு தேர்தலும் நிரூபித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வாக்குக்கு பணம் வழங்கி அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கி இருக்கின்றன.
2014ல் மக்களவை தேர்தல்களின் போது அதிமுக பணத்தை வாரி இறைத்தது.
தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகளுக்கு பணம் வழங்கப்பட்டது.
செய்தித்தாள்களுக்குள் வைத்து பணம் வழங்குதல், பால் பாக்கெட்டுகளுடன் சேர்த்து பணம் வினியோகித்தல், பேனாக்களில் ரீஃபிலை எடுத்துவிட்டு ரூ.1000 தாள்களை வைத்து வழங்குதல் என பலவிதமாக அ.தி.மு.க.வினர் பணம் வழங்கியிருந்தனர்.
தருமபுரி தொகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை அ.தி.மு.க. செலவிட்டதாகவும், ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
ஆனால் அதற்கு முன்னதாக 2009ல் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்றது. வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வெற்றிபெறுவது எப்படி என அழகிரி இந்தியாவுக்கே பாடம் நடத்தியிருந்தார்.
மேலும் பெரியகுளத்தில் லோக்சபா தேர்தலில் முன்னர் தினகரன் போட்டியிட்ட போது பணம் மட்டுமல்லாது பொருளாகவும் வழங்கி வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது ஆர்.கே.நகரிலும் அதே முறையை தினகரன் கையாண்டு வருகிறார் என்கிறார்கள்.
மளிகைக் கடைகளில் மாதந்தோறும் மளிகை சாமான்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் கடனை தினகரன் தரப்பு கட்டிவிட்டு தொப்பிக்கு வாக்களிக்க வேண்டுகிறார்கள். பெண்களுக்கு ஒன்லைனில் ஆடைகள் வாங்க டோக்கன் கொடுத்து வாக்கு கேட்கிறார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.
பிரசார கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தலைக்கு 500 ரூபாய் பணமும் பிரியாணியம் வழங்கப்படுகிறது.
25 வாக்காளர்களுக்கு 2 பிரதிநிதிகள் என்ற கணக்கில் இரங்கி வேலை செய்கிறார்கள். அவர்கள் தினமும் வாக்காளர்களை கவனிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை கொடுப்பது, கிலோ கணக்கில் ஆடு கோழி இறைச்சி கொடுப்பது என்று பல வகைகளில் மக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க சில பொதுமக்களே பணத்தை கேட்பதாகவும் கூறப்படுகிறது. தினகனுக்கு ஆரத்தி எடுத்தால் 300 முதல் 500 வரை பணம் வழங்கப்படுவதால் சிலர் போட்டி போட்டு ஆரத்தி எடுப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாக்காளர்களுக்கு மட்டுமல்லாது திமுக , ஓபிஎஸ் தரப்பு கோஷ்டிகளும் தினகரன் தரப்பால் கவனிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
தினகரனின் கவனிப்பை பார்க்கு போது அவர் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment