முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது வாழிடங்களை இராணுவத்திடம் மீட்டுத் தருமாறு கோரி இன்று 39 ஆவது நாளாக போராடிவருகிறார்கள்.
2009 இல் இடம்பெற்ற இறுதிப் போரில் தமது வாழிடங்களை விட்டு இந்த மக்கள் வெளியேற வேண்டியேற்பட்டது. பின்னர் இம்மக்களின் நிலங்களை இராணுவம் கைப்பற்றி முகாம்களை அமைத்தது.
இந்த நிலையில் தமது சொந்த வாழிடங்களை தருமாறு கோரி கேப்பாப்புலவு மக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒரு மாத காலம் இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கத்தின் போலி வாக்குறுதியை நம்பி மக்கள் கைவிட்டனர். எனினும் 84 குடும்பங்களின் 42 ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டன என்பதை அறிந்த மக்கள் 01.03.2017 முதல் மீண்டும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
விடுவிக்கப்படாத 486 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 145 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு ஆதரவாக ஏனையவர்களும் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனை தொடர்பாக ஐ.நா.முதல் இலங்கை நாடாளுமன்றம் வரை பேசப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை.
காணிகளை வழங்குவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பொதுமக்களின் வாழிட நிலங்களை அம்மக்களிடம் ஒப்படைக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
''குடிமக்களுக்கு சொந்தமான காணிகளை மீண்டும் கையளிக்காது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இல்லை. இக்காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் அந்த உறுதிமொழிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லை. குடிமக்களுக்குச் சொந்தமான காணிகளில் ஆயுதப்படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பது, நாட்டின் சட்டங்களை மீறுகின்ற செயலாகும். இத்தகைய நிலைமை தொடரக் கூடாது'' என சம்பந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment