சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என இலங்கை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டோ அல்லது வேறு காரணங்களின் அடிப்படையிலோ இவ்வாறு விடுதலை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். நேற்று (12.04.2017) யாழ். மத்திய கல்லூரியில் பனை அபிவிருத்தி சபையின் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு போராடி வருகிறார்கள். விடுதலை செய்யமுடியாது விட்டால் பிணை வழங்குங்கள், அல்லது புனர்வாழ்வு வழங்குங்கள் என்று அவர்கள் கோருகின்றனர்.
ஊழல் வழக்கில் 87 நாட்கள் உள்ளேயிருந்த விமல் வீரவன்சவுக்கு 07.04.2017ல் பிணை வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பல காரணங்களை கூறி விமல் வீரவன்ச பிணை கேட்டிருந்தார். 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மகள் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிணை தாருங்கள் என்று உருக்கமாக கோரியிருந்தார்.
சட்ட மாஅதிபர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்கப்பட்டது. முன்னதாக புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட விமல் வீரவன்சவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பல சிங்கள அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் பல வருடங்களாக நீண்ட கால தடுப்பில் இருக்கின்ற தமிழ் கைதிகளுக்கும் இவ்வாறு மனிதாபிமான அடிப்படையில் பிணை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருந்தன.
தற்போது வந்துள்ள தமிழ்-சிங்கள புத்தாண்டு, அடுத்த மாதம் ஐநா சபையின் ஆதரவுடன் வரவுள்ள சர்வதேச வெசாக் பண்டிகை போன்றவற்றை அடிப்படையாக வைத்து நீண்டகால தமிழ் தடுப்புக்காவல் கைதிகளை பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை வழங்கப்படவேண்டும் என்று பலரும் கோரியிருந்தனர்.
94 தமிழ் அரசியல் கைதிகள் எந்தவொரு விசாரணையுமின்றி தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு பிணை வழங்காவிட்டால் பொதுமன்னிப்பிலாவது விடுதலை செய்யப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பும் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ''பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் 43 அரசியல் கைதிகளே உள்ளனர். அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, வழக்கு விசாரணையின் பின்னரே அவர்களை விடுவிக்க முடியும்'' என்று தெரிவித்திருந்தார்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அரசியல் கைதிகள் பலர் பிணையில் விடுவிக்கப்பட்ட போது பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கண்டனம் தெரிவித்திருந்தார்.
''சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், ஒரு சிலரது அரசியல் இலாபங்களுக்காக விடுவிக்கப்படுகின்றனர். யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் கைதுசெய்யப்பட்ட சுமார் 200 பேர் பூஸா போன்ற சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இவர்கள் பலதரப்பட்ட இலக்குகளை வைத்துக்கொண்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்தது.
இவர்களைக் கைதுசெய்வதற்கு எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டிருந்தோம் என்றுகூட சிந்தித்துப் பார்க்காமல் ஒரு சிலரது அரசியல் இலாபங்களுக்காக இன்று விடுவிக்கப்படுகின்றனர்'' என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
''இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 290 பேரில் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன'' என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் 15.02.2016ல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் அல் ஹுசைனை சந்தித்து மிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டுமென கோரியிருந்தார்.
ஆனால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அதை நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் அவர் சிரியா விவகாரத்திலும் இத்தகைய கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை பெரும்பாலான தமிழ் அரசியல் கைதிகள் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஒரே ஆதாரத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்கும் அதன் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. ஆனால் இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் கடுமையான சித்திரவதைகளின் மூலமே பெறப்பட்டுள்ளன என்று நீண்டகாலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment