சண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடர் நாடகத்தின் கதை என்னுடையது. சுந்தர்.சி. என்னை ஏமாற்றிய அவரது பெயரை போட்டுக்கொண்டுள்ளார் என்று நடிகரும் இயக்குனருமான வேல்முருகன் இந்தியாகிளிட்ஸ்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
''நந்தினி கதையை கேட்ட சுந்தர்.சி கதை நன்றாக இருக்கிறது ஆனால் உங்களது பெயரை போட முடியாது. இந்த தொடர் நாடகத்திற்கு சண் தொலைக்காட்சிதான் பணம் கொடுக்கிறது. எனவே அவர்கள் எனது பெயர் இருப்பதையே விரும்புவார்கள். ஆனால் உங்களை உதவியாளராக போட்டு மாதம் ஒரு லட்சம் தருகிறேன் என்று சொன்னார்.
நண்பர் என்பதால் நானும் ஒத்துக்கொண்டேன்.
நான்கு மாதம் சொன்னபடி பணம் தந்தவர் பின்னர் பணம் தரவில்லை. கேட்டதற்கு சாக்குபோக்கு சொன்னார். என்னிடம் பணமில்லை, உங்களிடம் இருந்தால் எனக்கு தாருங்கள் என்று சொன்னார். அதற்குப்பிறகுதான் நான் இந்த உண்மையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டேன்.
அதற்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் 'வேல்முருகனுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை அவர் ஒழுங்காக செய்யவில்லை. எனவே வேலையைவிட்டு நீக்கினேன். இப்போது தனது கதை என்று சொல்கிறார். சமூகத்தில் பெயர் புகழுடனும் இருக்கும் எனக்கு களங்கத்தை உண்டாக்கி மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு வேல்முருகன் 50 லட்சம் தரவேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
அதற்கான பதிலை நான் எனது வக்கீல் அனுப்பிவிட்டார்.
அரண்மனை ஒன்று படம் கூட இவரது கதை கிடையாது. ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையை திருடி எடுக்கப்பட்ட படந்தான் அரண்மனை.
ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டதும் 20 லட்சத்தை அபராதமாக சுந்தர்.சி தயாரிப்பாளருக்கு கொடுத்து பிரச்னையை மறைத்துவிட்டார்.
சுந்தர்.சி.யின் 90% மான படங்கள் வேறு மொழிகளில் இருந்து சுட்டவையே.
அரசியல் பலத்தை வைத்து சுந்தர்.சி என்னை மிரட்ட முடியாது. அவருக்கு இப்போதுதான் அரசியல் பலம் இருக்கிறது. ஆனால் நான் அரசியல் குடும்பத்தில் பிறந்தவன். சிறுவயதில் அரசியலில் ஈடுபட்டவன். எனவே அவர் அரசியலை வைத்தெல்லாம் என்னை மிரட்ட முடியாது.
எனது கதைக்கான பணத்தை கொடுத்தால் பிரச்னையை இத்தோடு விட்டு விடுவேன். இல்லை என்றால் சுந்தர்.சி.மீது நடவடிக்கை எடுப்பேன். நந்தினி எனது கதை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நந்தினி சீரியலில் இனி என்ன வரும் என்று என்னால் சொல்ல முடியும். எழுதியது நான் என்பதால் எனக்கு எல்லாம் தெரியும்.
நான் கதையை பதிவு செய்யவில்லை. ஆனால் பல பிரபலமானவர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக இந்த கதையை சொல்லியிருக்கிறேன்.
அவர்கள் இந்த கதையை படமாக எடுக்கவும் தயாராக இருந்தார்கள்.
நண்பர் என்பதால் நான் சுந்தருக்கு இந்த கதையை கொடுத்தேன்.
எனக்கும் அவருக்கும் இடையே 15 வருட நட்புண்டு. அவரது இரண்டாவது படத்திலிருந்து நான் வேலை செய்திருக்கிறேன். வின்னர் படத்தில் வடிவேலின் பாத்திரம் கூட எனது படைப்புதான். அப்படி சுந்தர்.சி.யின் பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு எனது நகைச்சுவை எழுத்தே காரணமாக இருந்திருக்கிறது.
கதையின் மூல பிரதி என்னிடம் உள்ளது. நந்தினி எனது கதை என்று என்னால் நிரூபிக்க முடியும்.
இனிவரும் பாகங்களில் அவர் சீன்களை மாற்றலாமே தவிர கதையை மாற்ற முடியாது. நான் நினைத்தால் நந்தினி யார் என்பதுமுதல் கதையின் சஸ்பென்ஸ் வரை எல்லாமே வெளியே சொல்ல முடியும். ஆனால் தர்மத்திற்காக சொல்லாமல் இருக்கிறேன். எனக்குரிய சம்பளத்தை அவர் தராது விட்டால் நான் அவற்றை எல்லாம் சொல்ல வேண்டி வரு''ம் என்று நடிகரும் இயக்குனருமான வேல்முருகன் கூறியுள்ளார்.
நன்றி - இந்தியாகிளிட்ஸ்
0 comments:
Post a Comment