இந்தியா

நெடுவாசலில் மீண்டும் வெடிக்கப்போகும் போராட்டம்



நம்மாழ்வார் பிறந்த தினமான இன்று 6ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்தை நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவிக்கவுள்ளனர்.

மக்களது எதிர்ப்பு போராட்டங்களை அலட்சியப்படுத்திய பாஜக மத்திய அரசு, கடந்த மார்ச் 27ல் நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான ஜெம் லாபரெட்டரீஸிற்கு நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதையடுத்து மத்திய, மாநில அரசுகள்மீது நம்பிக்கை இல்லாததால் மீண்டும் போராட்டத்தைத் துவங்க உள்ளதாக, நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுடன் கலந்தாலோசித்து, போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என, போராட்டக்குழுவினர் கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 21 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.

நெடுவாசல், கோட்டைக்காடு, நல்லாண்டார் கொல்லை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல பாகங்களிலும் இருந்தும் மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என சகலரும் நெடுவாசல் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

முதல்வர் பழனிசாமி, ''ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழக விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்ற உறுதியை ஏற்று, நெடுவாசல் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு தீர்மானமாக உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடமுடியும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவித்திருந்தனர்.

தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க.தலைவர்கள் பொதுமக்களுக்கு விருப்பம் இல்லாமல் திட்டம் நிறைவேற்றப்படாது என்று தொடர்ந்து கூறிவந்தனர். எனினும் அரசியல்வாதிகளைப் பற்றி தெரிந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல முயற்சிகளை மேற்கொண்டார். மக்கள் விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என அவர் உறுதியளித்தார். மத்திய அரசுடன் பேச்சு நடத்தவும் ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மத்திய அரசு மக்களின் உணர்வினை மதித்து திட்டத்தை ரத்து செய்யும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய பா.ஜ.க. அரசாங்கம் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, தமிழக விவசாயிகளையும் மக்களையும் நம்ப வைத்து போராட்டத்தை கைவிட வைத்த பா.ஜ.க,
தமிழகத்தை நம்ப வைத்து கழுத்தறுத்தது என கண்டனங்கள் எழுந்திருந்தன.

0 comments:

Post a Comment

Powered by Blogger.