இலங்கை காங்சேன்துறை கடற்பகுதியில் பெருந்தொகை போதைப் பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடல் படை இன்று அறிவித்துள்ளது.
அந்த போதைப்பொருள் ஹெரோயின் என்று கருதுவதாகவும், 13.5 கிலோ கிராம் எடை கொண்டதாக இருப்பதாகவும் இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருளின் பெறுமதி 162 மில்லியன் இலங்கை ரூபா என இலங்கை கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமான்டர் சமிந்த வளாகுலுகே மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளும் சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கை மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து 4 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று இலங்கை கடல் படை இன்று அறிவித்துள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும் அதில் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் இலங்கை கடல் படை இன்று கூறியுள்ளது.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஒரு நாளில் வெளிவந்த இந்த இரு செய்திகளைப்போலவே அடிக்கடி போதைப்பொருள் கடத்தல் பற்றிய செய்திகள் இலங்கையில் அடிக்கடி வெளியாகின்றன.
மறுபுறம் தமிழக மீனவர்களை இலங்கை தாக்கியதாக செய்திகள் வெளியாகின்றன.
தமிழக மீனவர் தாக்கப்படுவதும் போதைப்பொருள் கடத்தப்படுவதும் சம்பந்தமில்லாத இரு விடயங்கள். ஆனால் தென்னிலங்கை ஊடகங்கள் இரண்டையும் முடிச்சு போடுகின்றன.
போதைப்பொருள்கடத்தல் உலகம் முழுவதும் நடக்கின்ற குற்றச் செயலாக இருக்கிறது. பெரும் பணத்திற்கு ஆசைப்படுகின்றவர்களும், சில அமைப்புகளும் இந்த கடத்தலை செய்கின்றன. விடுதலைப்புலிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் பணம் சேர்த்து ஆயுதங்கள் வாங்கியதாக பல முன்னாள் புலி உறுப்பினர்கள் எழுதி இருக்கிறார்கள். அது தவறு என்று மறுப்பவர்களும் உண்டு.
இதேவேளை இலங்கை கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பளத்துக்கு வேலை செய்பவர்களே. படகுகள் அவர்களுக்கு சொந்தமானவையல்ல.
இந்த படகுகள் தமிழக அரசியல்வாதிகளுக்கும், பெரும் வியாபாரிகளுக்கும் சொந்தமானவை. அவர்கள் பெரும் லாபத்தை எதிர்பார்த்து மீனவர்களை இலங்கை கடலில் மீன்பிடிக்க வற்புறுத்துகிறார்கள் என ஏற்கனவே பல செய்திகள் வந்துள்ளன.
இந்த வருடம் 85 தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 146 படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது. ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதனை இலங்கை கடற்படை மறுத்திருந்தது.
இதுவரை 700 ற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று நூற்றுக்கணக்கான படகுகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எதனையும் இந்திய மத்திய அரசு இதுவரை எடுக்க்கவில்லை என்று தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எனவே இந்த சிக்கலான சூழலில் மீன் பிடி தொழிலையும் போதை பொருள் கடத்தலையும் ஒன்றாக பார்க்கமுடியாது.
மீனவர்களில் சிலரோ அல்லது வேறு நபர்களோ போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட கூடும்.
இதன் உண்மை நிலையை அறிய இந்திய இலங்கை அரசாங்கங்கள் நீதியான விசாரணைஒன்றை நடத்தவேண்டும்.
நடுநிலையான ஆழமான விசாரணை ஒன்றினால்தான் இந்த குழப்பங்களுக்கு விடைகிடைக்கும்.
0 comments:
Post a Comment